December 29, 2010

முதல் முதலா லவ் லெட்டர் கொடுத்தது....2

லவ் லெட்டர் ரெடி.....கொடுக்க ஒரு "கேனபயலும்" கிடைச்சாச்சு...அடுத்து என் டயலாக் இதுதான்.."ஹலோ..நான் பிரசன்னவோட ஃபிரண்டுங்க...நீங்க தப்பா நினைக்காம இந்த லெட்டரை வாங்கிக்குங்க...படிச்சு பாருங்க..பிடிக்கலேனா கிழிச்சு போட்ருங்க..!!" இதுதான் நான் பேச வேண்டியது
.
உணவு இடைவேளையில் ஒருவன் "சுஜினி" போல கற்பனையாக நடிக்க... நான் கடிதம் கொடுப்பதுபோல் ஒத்திகை நடந்தது..நான் கையில் கடிதத்துடன் சென்று "ஹலோ...நான் பிரசன்னா ஃபிரண்டு சதிஷ்ங்க...நீங்க......," 
பிரசன்னா இடைமறித்து "டேய்...இப்போ உன் பேரை யாரு சொல்ல சொன்னா...இது ரொம்ப அவசியம்...?" 
எல்லாரும் சிரிக்க மீண்டும் ஒத்திகை..."ஹலோ நான் பிரசன்னா ஃபிரண்டுங்க..நீங்க தப்பா நினைக்காம இந்த லெட்டரை.."
சொல்லி முடிப்பதற்குள் பொருளாதார ஆசிரியை வந்துவிட..
நான் குழற..."வாங்கிக்குங்க...பிடிக்கலேனா கிளாஸ் விட்டு வெளிய போயிடறேன்..என்று முடிக்க மீண்டும் வகுப்பே சிரித்தது..!!

மாலை...
எங்கள் பள்ளி முடிந்து செல்லும் வழியில் தான் அவள் படிக்கும் பள்ளி உள்ளது. என் வகுப்பு மொத்தத்திற்கும் பிரசன்னா "கிரீம் பன் மற்றும் பெப்சி" வாங்கி தந்தான் அவன் செலவில். எனக்கு மட்டும்  2 கிரீம் பன்..(நான் தானே பலிகடா..). இதற்கு இடையில் பெப்சி குடித்தபடி நான்"ஏண்டா இன்னைக்கு ஒத்திகையே அபச குணமா நடக்காம போச்சே...அதனால இந்த காரியத்தை நாளைக்கு செஞ்சா என்ன..? 
பிரசன்னா "நாளைக்கும் உனக்கு கிரீம் பன் வேணும்னா கேளு வாங்கி தரேன்.ஆனா நீ இன்னைக்கு கண்டிப்பா கொடுக்கணும்டா..!! அவன் கண்களில் ஒரு ஒளி தெரிந்தது...எனக்கோ எல்லாம் இருளாவது போலிருந்தது. 

நான் கடிதம் கொடுக்க வேண்டிய இடம் "ஹோப் காலேஜ்" என்ற பஸ் நிறுத்தம். அந்த இடத்திற்கு நாங்கள் வந்து சேர்ந்த போதுதான் கவனித்தேன்....நல்ல கூட்டம் கூடி இருந்தது. மொத்த கூட்டமும் என்னை" பொதுமாத்து" போடத்தான் கூடி இருப்பதாய் தோன்றியது. சுஜினி அவள் தோழிகளுடன் வரும்போதே நாங்கள் பஸ் நிறுத்தத்தின் எதிர்புறம் கூடி இருப்பதை கவனித்து விட்டாள்.என்னை கடிதம் கொடுக்க எல்லாரும் போக சொல்ல, நான் சாலையை கடக்க தாமதிக்க..,வெள்ளிங்கிரி பிடித்து தள்ளி விட்டான். நான் ஒரு வழியாய் சாலையை கடந்து அவள் நிற்கும் இடத்திற்கு அருகே சென்றேன்.அவள் ஏதோ தன் தோழியிடம் சொல்லி சிரித்து கொண்டாள். நான் ஒவ்வொரு பஸ் வரும்போதும் இதில் ஏறி சென்று விடுவாள்...என காத்திருக்க..அவளோ போகாமல் பேசிகொண்டே இருந்தாள்.மறுபுறம் எதிரில் இருந்து பிரசன்னா மற்றும் நண்பர்கள் கல்லெடுத்து எறியவும்,செருப்பை காட்டியும், நாக்கை மடித்து கடித்தும் என்னை மிரட்டி கொடுக்க சொன்னார்கள். எனக்கோ கூட்டம் மொத்தமும் என்னையே பார்ப்பதுபோல் ஒரு பிரம்மை. 

ஒரு "கிரீம் பன்னுக்கு ஆசைப்பட்டு பப்ளிக்ல ஜாம் ஆக போறியே..?" என்று இதயம் அடித்துகொண்டது. நேரம் போக போக பிரசன்னா சாலையை கடந்து வந்து "எழுத்தில் பதிய முடியாத ஒரு கெட்ட வார்த்தையை" என் காதோடு ஓதிவிட்டு மறுபுறம் போனான். நான் இறுதியாக போர் வீரனானேன். நெஞ்சை நிமிர்த்தி மேல் பாக்கெட்டில் இருந்து கடிதத்தை எடுத்தேன். எடுத்தபோது கடிதத்தோடு ஒரு ரூபாய் நாணயமும் ஒன்று வந்தது.இதுதான் சரியான யோசனை என்று அந்த கடிதத்தோடு ஒரு ரூபாயையும் காட்டி "ஹலோ...ரெண்டு  50 இருக்குங்களா..?என்று கேட்க அவளோ "இல்லை" என தலை ஆட்ட...நான் முகத்தை சோகமாக்கி தொங்கவிட்டபடி சாலையை கடந்து நண்பர்களிடம் "டேய் மாப்ள..அவளுக்கு பிடிக்கலேன்னு சொல்லிட்டா டா..?!என்று வானம் பார்த்து பேசினேன். 

பிரசன்னா முகம் இருண்டு போனது. இதற்கு இடையே வெள்ளிங்கிரி "ஏண்டா நான் பார்த்துகிட்டே தான் இருந்தேன் நீயும் ஜாஸ்தி பேசல அவளும் ஒன்னும் பேசல அப்புறம் எப்படி..?குழப்பமா இருக்கே..என்று இழுத்தான். நான் சுதாரித்து "நான் பேசுனது உனக்கு தெரியல பஸ் மறைச்சிடுச்சு..ஆனா அவ முடியாதுன்னு தலை ஆட்டுனதை பார்த்த தானே..?! என்று சமாளித்தேன்.நண்பர்கள் துவண்டு போன பிரசன்னாவை தேற்ற தொடங்க நான் நீண்ட பெருமூச்சு விட்டேன்.
இவ்வளவுதானா என்று நினைக்காதீர்கள்...கதைக்கு கிளைமாக்ஸ் ஒரு வாரம் கழித்து தான் நடந்தது.

சுருக்கமா சொல்றதுனா..மீண்டும் அவள் அதே பஸ்ஸில் பிரசன்னாவை பார்த்து சிரிக்க,இவன் அவள் தோழியிடம் சொல்லி கடுப்பாக, சுஜிநியோ நான் "ஒரு ரூபாய்க்கு சில்லறை" கேட்டதை உடைக்க, அவனுக்கோ காத்து வழியே புகை மண்டலமே போக, வகுப்பு நண்பர்களிடம் அதிகாலையில் வந்து இதை பரப்ப, நான் வழக்கம்போல "குட் மார்னிங் " சொல்லி என் இருக்கை செல்ல, மேஜை விரிப்பை காணமல் நான் யோசிப்பதற்குள் என் தலையை ஒரு துணி மூட கண் இருளடைந்தது....சரமாரியாக பல திசைகளிலும் அடி விழ கண்ணில் நட்சத்திரம் சுற்றியது. பிறகு என்ன ஒரே நக்கலும்,கேலியும் அடியும் தான். அதிலிருந்து "வாடா 1 ருபீ காய்ன்"என பட்டை பெயர் வைத்து என்னை அழைக்க துவங்கினார்கள்.

பிரசன்னாவும் சுஜினியும் என் காமெடி உபயத்தில் பேச தொடங்கி,ஒரு மாதத்தில் அவர்கள் காதல் கனிந்தது.  

December 26, 2010

முதல் முதலா லவ் லெட்டர் கொடுத்தது...வாழ்க்கை என்னும் "ரோடு ரோலர்" எல்லாவற்றையும் நசுக்கிய போதும்...சில அழகான தருணங்கள், சில நகைச்சுவை சம்பவங்கள் , பள்ளி மற்றும் கல்லூரி காலங்கள், நம்மை கடந்த தேவதைகள், (பில்ட் அப்) அட்டுகளையும் தேவதைகளாக வர்ணித்த கவிதைகள்..,நண்பர்கள் காதலுக்காக "லோல்" பட்டது...இப்படி மறக்க முடியாத சிறு சந்தோசங்கள் இருக்கத்தான் செய்கின்றன. 

"வாத்தியார் தவறான பதிலுக்கு மறந்து முழு மதிப்பெண் போட்ட போது கிடைத்த சந்தோசம்" போல் இந்த சந்தோஷ நினைவுகளும் நம் இதய துடிப்பை அதிகரிக்கத்தான் செய்கின்றன...நிற்க
.
நான் +2 படிக்கும்போது என் நண்பனின் காதலுக்காக செய்த "அலப்பரை தான்" இந்த பதிவு. நான் கவிதை என்று கிறுக்க தொடங்கி 3 வருடங்கள் ஆன தருணம் அது. அப்போது "பிரசன்னா" என்ற என் நண்பன் தினமும் வரும் பேருந்தில் "சுஜினி" என்ற பெண்ணை கண் பார்த்து காதல் வளர்த்து வந்தான்.எத்தனை நாள்தான் இப்படியே கண்ணை மட்டும் பார்க்கிறது..? அதனால ஒரு லவ் லெட்டர் கொடுத்து காதலை வெளிப்படுத்த நினைத்தான். 

வகுப்புக்கு வந்ததும் சக நண்பர்களிடம் ஆலோசனை கேட்க்க நான் முந்திரிகொட்டை போல "மாப்ள நீ லவ் லெட்டர் கவிதையா எழுதி கொடு..அப்பத்தான் இம்ப்ரெஸ் ஆவாள்..என்று ஐடியா கொடுத்தேன். 
அவன் கவிதை எழுத வராது என்றதும்..நானே அவளை பற்றிய சில குறிப்புகளை கேட்டு அதை வைத்து ஒரு கடிதமும் எழுதியும் கொடுத்தேன்...கடிதம் இதுதான்..

"என் செல்ல பட்டாம்பூச்சிக்கு...
ஆம்..
என் நண்பர்களிடம் உன் பெயரை 
அப்படித்தான் செல்லமாக சொல்லி வைத்திருக்கிறேன்..
ஏன் தெரியுமா?
உன் கண்கள் என்னை பார்த்ததும்.., 
"பட்டாம்பூச்சியின் சிறகை"போல் அடித்துகொள்ளுமே 
அதனால்..!!
நீ நலமா...? நான் இங்கே சுகமாய் இல்லை...
தினமும் இரக்கமே இல்லாமல் 
என் ஆசிரியர் கொடுக்கும் எழுத்து சுமைகளை விட... 
சொல்லாமல் வைத்திருக்கும் "உன்மேலான என் பிரியம்" 
வளர்ந்து வளர்ந்து பெரும் சுமையாக சேர்ந்து 
என்னை அமுக்குகிறது...!! 
உன் தோழி "பசி" என்றதும்.. 
உன் மொத்த மதிய உணவையும் கொடுக்கும் 
இரக்க குணம் உனக்கு என கேள்விப்பட்டுதான் 
இந்த கடிதத்தை எழுத தைரியம் வந்தது எனக்கு..
தோழிக்கு இத்தனை செய்த நீ 
உன் தோள் சாயும் சின்ன சந்தோசத்தை மட்டும் தருவாயா எனக்கு..? 
-உன்னை பற்றிய கனவுகள் மட்டும் காணும்  
ஒரு இதயம் (13A BUS)"

கடிதம் ரெடி...யார் கொடுப்பது..? பிரசன்னவுக்கோ அவளை பார்த்தாலே "பிரசவம்" கண்டு விடுகிறதாம். அப்போதுதான் வெள்ளிங்கிரி என்னை கை காட்டி "டேய் சதீஷ் கொடுத்திடுவான்..அவன்தான் காமெடியா பேசி கொடுக்க சரியான ஆள்..?!" என்று என்னை மாட்டிவிட்டான். அவனுக்கு என்னை இப்படி மாட்டி விடுவதில் ஒரு குரூர ஆசை. நான் முடியவே முடியாது என்று "கசாயம் குடித்தும்" பலனில்லாமல் போனது...இதுக்கு பேருதான் "எங்கோ போறத எடுத்து...எதுகுள்ளோ விடுவது" என்று சொல்வார்கள். 

எல்லா நண்பர்களும் ஒன்று சேர்ந்து நண்பேண்டா என்றதும்...வேறு வழி இல்லாமல் ஒத்துக்கொண்டேன்...
இனிதான் சனியே....ஆரம்பம்...

தொடரும்....    

December 23, 2010

ஆதலினால் காதல் செய்வீர்

"நிலாச்சோறு"  ஊட்டுவார்கள் 
குழந்தைக்கு..
"நிலாவே....சோறு ஊட்டும் 
எனக்கு...

ஆதலினால் காதல் செய்வீர்..!!
******************************************
நிலா தன் சிநேகிதனுக்கு 
இரவு பாவடையில் வைத்து  
"காக்கா கடி" கடித்த 
துண்டுகள்தான் 
நட்சத்திர சிதறலோ..??
******************************************
இந்த நிலா முதிர்கன்னியின்  
எதிர்பார்ப்பு...
வரதட்சணை வில் முறிக்கும்  
வீர இளைஞன்..!!

December 2, 2010

அவ்வளவு அழகு நீ..!!

உன் 
அழகையெல்லாம் சாறு பிழிந்து, 
வடிகட்டி எடுத்து வைத்தால் 
போதும்...
ஆயிரம் வருடங்களுக்கான 
தீங்கில்லாத "மது" தயார்..
அவ்வளவு அழகு நீ..!!  
**********************************************
போட்ட கோலத்தின் அழகை 
நீயே தலை சாய்த்து ரசித்து 
பின் குளிக்க செல்வாய் 
சுடு நீரில்...
"குனிந்து கோலம் போட்ட அழகை"
தீயாய் பார்த்திருந்த 
குருவி 
குளிக்க செல்லும் 
"சில்லென" இருக்கும் 
ஆற்று தண்ணீரில்...!!
************************************************
"இப்படியா ஒரு பொட்டபுள்ள"என்ற 
உன் அம்மாவின் வசவை கேட்டு 
சிணுங்கியபடி 
புரண்டு படுப்பாய் மீண்டும்..
பேரழகை ஜன்னல் வழியே கண்டு 
மருகிய குருவி கத்தும்....
இதைகேட்டு 
"மார்கழி மாதம்" வந்து விட்டதென 
மற்ற குருவிகளும் கிரிச்சிட 
விடியும் 
என் காலை பொழுது..
குட் மார்னிங்...!?